தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் -1 பணிகளில் 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது.
டிசம்பர் 31ஆம் தேதி குரூப் -1 பணியிடத்திற்கு தகுதிபெற்ற 363 தேர்வர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டதையடுத்து, குரூப்-1 பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான கலந்தாய்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற அர்ச்சனா, இரண்டாமிடம் பெற்ற யுவரேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாவட்ட துணை ஆட்சியர் பதவிகளைத் தேர்வு செய்தனர்.
இதுகுறித்து பேசிய தேர்வர் அர்ச்சனா, 'பொறியாளர் பட்டம் பெற்று, மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்விற்காக கடந்த ஓராண்டாக பயிற்சி செய்தேன். தேர்வு முறை மிகவும் நேர்மையாக நடைபெற்றது. தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதிலிருந்து அனைத்தும் இங்கே வெளிப்படையாக நடப்பதால், வெளியில் இருந்து வரும் தகவல்கள் தவிடு பொடியாகியுள்ளது' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தேர்வர் யுவரேகா, 'விவசாயப் பொறியியல் பட்டம் பெற்றது தனக்கு குரூப்-1 தேர்வு எழுதுவதற்கு உதவியாக இருந்தது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஐஏஎஸ் ஆகவேண்டும் என படித்தேன். ஆனால், தற்போது முதல் முறையிலேயே குரூப்-1 தேர்வில் துணை ஆட்சியர் பணியிடத்திற்கு தேர்வு பெற்றுள்ளேன். எனது பணியை நான் சிறப்பாக செய்வேன்' என்றார்.
இதேபோன்று துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பத்திரப்பதிவுத் துறை மாவட்டப் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ஆகிய பணியிடங்களில் 181 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர்கள் கவனத்திற்கு: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்