அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது. இதன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் ஒரு துறையை தேர்வு செய்து பணிபுரியும் அலுவலர், வேறு துறைக்கு மாற்றம் பெற விரும்பினால் அவர் அரசிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரின் விண்ணப்பங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டு, ஆய்வுக்குப்பின் ஒப்புதல் அளிக்கப்படும். அதன் பின்னரே ஒரு துறையிலிருந்து வேறு துறைக்கு பணிமாற்றம் செய்ய அரசு அனுமதி வழங்கும்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” 2019 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2020 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, ஒரு வழி அல்லது துறை மாற்றம் செய்ய அரசிற்கு விண்ணப்பித்தவர்களில், 225 விண்ணப்பங்கள் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 222 விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி சிறப்பு விதியின் படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களுக்கு போதிய சான்று ஆவணங்கள் இல்லாததால், கூடுதல் விவரங்கள் கேட்டு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூகலிப்டஸ் மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் அனுமதி!