சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது , "வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த பின்னர், நேரடியான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியா திரும்பி வந்தனர். அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று படிக்க முடியவில்லை. அந்த மாணவர்கள் இணையதளம் மூலம் படிப்பினை முடித்து, தேர்வின் மூலம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
ஆனால் சில மாணவர்கள் அந்த நாட்டிலேயே இருந்து படித்து முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் படித்த தங்களுக்கு இந்தியாவில் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 14 மாதங்கள் மாணவர்கள் மருத்துவப் பயிற்சி பெற வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும் இணையதளம் மூலம் படித்த மாணவர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த வழக்கில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. இது குறித்து வழக்கறிஞரின் கருத்தும் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் 800 பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
இவர்களில் 400 மாணவர்கள் முழுப்படிப்பையும் வெளிநாட்டில் தங்கி முடித்துள்ளனர். அவர்களை தமிழ்நாட்டில் மருத்துவப் பயிற்சிக்கு அனுமதிப்பதில் பிரச்னைகள் இல்லை. ஆனால், இணையதளம் வாயிலாக படித்த மாணவர்களை தேசிய மருத்துவக் கவுன்சில் உத்தரவுப்படி அனுமதிப்போம்" என தெரிவித்தார்.