சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவிந்தரகுமார், "முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று பின், அரசு மருத்துவர்களுக்காக வெளியிடப்பட்ட அரசாணை, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை கடந்த 4 மாதங்களாக அமல்படுத்தாமல், அரசு அலுவலர்கள் வாய்மொழி உத்தரவின் மூலம் நிறுத்தி வைத்துள்ளனர். அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதேபோன்று கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதுவும், இதுவரை வழங்கப்படவில்லை. இந்தச் சிறப்பு ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சியில் வழங்கப்படாமல் இருந்த ஊதிய உயர்வு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில் மேலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதையும் அரசிற்கு வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை’ - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு