தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு விரும்பாததால் கலந்தாய்விற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 90,737 மாணவர்கள் சேராமல் 54.30 விழுக்காடு காலியாக உள்ளது. பொதுப்பிரிவினருக்கான நான்கு கட்ட பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 45 விழுக்காடு பொறியியல் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்புவதற்கான இடங்கள் 1லட்சத்து 72ஆயிரத்து 940ஆக உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதிவரை நடைபெற்று முடிந்துள்ளது.
நான்கு கட்ட கலந்தாய்வின் முடிவில் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் இருக்கிறது. அழைக்கப்பட்ட 1 லட்சத்து ஆயிரத்து 692 மாணவர்களில் 76,364 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பினை தேர்வு செய்துள்ளனர்.
13 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 100 விழுக்காடு இடங்களும், 30 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 90 விழுக்காடு இடங்களும், 157 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 50 விழுக்காடு இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும் 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. ஐந்து கல்லூரிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை போதிய அளவு இல்லாததால் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் வரும் காலத்தில் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தல் சிரமமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.