தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 88 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பொதுப்பிரிவில் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.
தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் தேர்வானவர்களில் ஒரு மாணவர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர் ஆவார். எஞ்சிய மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநில பாடத் திட்டங்களில் பயின்றுள்ளனர்.
அவர்களில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த இரண்டு மாணவர்களும், ஆந்திர மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மூன்று மாணவர்களும், ஐசிஎஸ்இ, கர்நாடகா பாடத்திட்டங்களில் படித்த தலா ஒரு மாணவரும், தெலங்கானா பாடத்திட்டத்தில் பயின்ற இரண்டு மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு மாநில பாடத்திட்டத்தில் 95 ஆயிரத்து 693 பேரும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 15 ஆயிரத்து 133 பேரும், ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் 583 பேரும், இதர பாடத்திட்டத்தில் 440 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணி புரிந்தவர்களுக்கு விருது