தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பள்ளிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதுடன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி (சானிடைசர்) வைக்கப்பட வேண்டும். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒருமுறை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்களுக்கு இணை நோய்கள் இருக்கிறதா? என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் கரோனா அறிகுறிகள் தென்படும் மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதரத் துறை ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவத் துறையின் சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டையையும் வழங்கினர்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், “மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்ற கரோனா தொற்று அறிகுறிகள் இருக்கிறதா? என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்கின்றனர். அறிகுறிகள் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆர்டிபிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்