சென்னை: (Perngulathur Continue rob)பெருங்களத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மேற்கு தாம்பரம் கிஷ்கிந்தா ஸ்ரீலட்சுமி விநாயகர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாபு.இவர் கடந்த 24 ஆம் தேதி குடும்பத்துடன் குலதெய்வ கோவிலிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு 5 சவரன் தங்க நகை மற்றும் இரண்டு லேப்டாப்புகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் கடந்த 10 நாட்களில் முடிச்சூர் லக்ஷ்மி நகர், வெங்கம்பாக்கம், பழைய பெருங்களத்தூர் சரவணபவன் நகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் ஆள் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெருங்களத்தூர் பீர்கங்கரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர்.
தனிப்படை
இதையடுத்து சேலையூர் உதவி ஆணையர் மூர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைத்து பெருங்களத்தூர் காவல்நிலைய எல்லைப்பகுதியில் பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
முடிச்சூர் செக்போஸ்ட் அருகில் பீர்க்கன்காரனை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
பிடிபட்ட கொள்ளையர்கள்
விசாரணையில் அவர்கள் குன்றத்தூரை சேர்ந்த சதீஷ்(19), பஷீர் முகமது(20), ஊரப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என தெரியவந்தது.
அவர்களுக்கு பெருங்களத்தூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 12 சவரன் தங்க நகைகள் இரண்டு லேப்டாப், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:BWF World Championships: இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்