முத்தமிழ்ப் பேரவையின் 40ஆம் ஆண்டு இசை விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தொடர்ந்து முத்தமிழ்ப் பேரவை சார்பில் விருதுகள் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:
கருணாநிதியின் உருவச் சிலையை திறந்துவைத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
அண்ணா அறிவாலயம், முரசொலி வளாகம், ஈரோடு, சேலம், திருச்சி போன்ற இடங்களைத் தொடர்ந்து தற்போது திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் கருணாநிதி சிலையை திறந்துவைத்துள்ளோம்.
இப்படிக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் நகரிலும் கருணாநிதி சிலையைத் திறந்தாக வேண்டும். திறக்கப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
காரணம் எல்லா ஊர்களோடும் தன்னை இணைத்து, பிணைத்துக் கொண்டவர் கருணாநிதி. நாட்டில் முத்தமிழுக்கு தற்போது சோதனை வந்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைப் புகுத்தி, நம் தாய் மொழியைச் சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொண்டாக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
அந்த வல்லமை நிச்சயம் நம்முடைய தமிழுக்கு உண்டு. 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் தமிழை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்தாக வேண்டும். தமிழை முதலிடத்திற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.