தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷையன் ஈ.டி.வி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது,
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் பிரேசில் நாட்டில் உள்ள மாட்டா கிரோஸோ கூட்டாட்சி பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இரண்டு பல்கலைக்கழகங்களும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும், மாணவர்கள் இரு நாடுகளிடையே பரிமாற்றம் செய்து கல்வி கற்கவும் பயனுள்ளதாக அமையும்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரேசில் போன்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம் ஆராய்ச்சிகள் மேம்படும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சீனிவாசன் என்பவர் தொழுநோய் குறித்த ஆராய்ச்சி செய்கிறார். அதேபோல மாட்டா கிரோஸோ பல்கலைக் கழகத்தில் உள்ள பேராசிரியர் அமுக்கர் என்பவரும் தொழுநோய் ஆராய்ச்சி செய்கிறார். இந்த ஆராய்ச்சிகள் குறித்த கட்டுரைகளை இருவரும் சேர்ந்து வெளியிட முடியும்.
இந்தியாவிற்குள் ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்கு மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்யலாமா? என நினைத்துள்ளோம். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை வலுவாக இருக்காது.
அப்போது வேதியியல் ஆராய்ச்சி மேற்கொள்ள வேறு ஒரு பல்கலைக் கழகத்துடன் இணைந்துதான் செய்ய வேண்டி உள்ளது.
வேலூரில் உள்ள திருவள்ளூர் பல்கலைக் கழகத்தில் வேதியியல், விலங்கியல் துறை வலுவாக உள்ளது. எனவே அதனுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறோம். பிரேசில் நாட்டு பல்கலைக் கழகத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் முக்கியமானவை தாவரங்களின் மருத்துவத் தன்மைகளைக் கண்டறிந்து தரப்படுத்துவதாகும்.
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் நதி, குயாபா நதி போன்ற நதிகள் பாயும் இடங்களில் வனப்பகுதிகள் அதிகளவில் இருக்கின்றன. இதனால் வனங்களில் வாழக்கூடிய விலங்குகள், தாவரங்கள் அதிகளவில் இருக்கின்றன.
மாட்டா கிரோஸோ கூட்டாட்சி பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள பழங்குடியின மக்கள் மூலிகையாக பயன்படுத்திவரும் செடி, கொடிகளை அவர்களிடம் பேசி அறிந்து வருகின்றனர். அவர்கள் தாவரங்களில் எந்தப்பகுதியை, எவ்வாறு பயன்படுத்துகிறோம் எனக் கூறுகின்றனர்.
அதனை பல்கலைக் கழகத்திற்கு எடுத்துவந்து மீண்டும் ஆராய்ச்சி செய்கின்றனர். அப்போது அதில் உள்ள வேதிப்பொருளையும், அதன் தன்மையையும் கண்டறிவதுதான் ஒரு மருந்தினை தரப்படுத்துவற்கான ஆராய்ச்சியாகும்.
தமிழகத்தில் நாம் பாட்டி வைத்தியமாகவும், கை வைத்தியமாகவும் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் இது தரமானதா என்றால் இல்லை என கூறுகிறோம். தமிழகத்திலும் எத்தனையோ செடிகள், மூலிகைகள் இருக்கின்றன. மூலிகை மருந்துகளை தரப்படுத்துவதற்கு இங்கிருந்து அனுப்பி ஆராய்ச்சி செய்தால் புதியதாக மருந்துகள், மருந்து செய்யும் முறைகளைக் கண்டறிந்து தரப்படுத்த முடியும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிரேசில் பல்கலை.யுடன் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை ஒப்பந்தம்