சென்னை: கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகள் குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் மேம்படுத்தும் திட்டத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளரிடையே பேசிய மா. சுப்பிரமணியன், "வெளிநாடுகளிலிருந்து வந்த 14 ஆயிரத்து 868 பேருக்கு கடந்த இரு வாரங்களில் பரிசோதிக்கப்பட்டதில் 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து பேர் மறுஆய்வு செய்யப்பட்டு நெகட்டிவ் என முடிவு வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் புதியதாக 28 பேருக்கு கரோனா மேலும் 28 பேருக்கு கரோனா மரபியல் மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகளை மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பியுள்ளோம், அதன் முடிவுக்கு காத்திருக்கிறோம். 70 மாதிரிகளில் எட்டு பேர் டெல்டா என அறிவிக்கப்பட்டு ஒரு நபருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. மற்றுமொரு நபருக்கு தொற்று கண்டறியப்படவில்லை என முடிவு வந்துள்ளது.
பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு அவர்கள் அனைவரும் வீடுகளில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழு நாள்களுக்குப் பிறகு பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளனர்.
தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் விதிகளை மீறி வெளியில் வந்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளில் 100 விழுக்காட்டினருக்கும் பரிசோதனை செய்யவும் கடிதத்தில் வலியுறுத்த உள்ளோம்.
நைஜீரியா, காங்கோவிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 278 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மூன்று விழுக்காடு படுக்கைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க:கரோனா மூன்றாம் அலை: விஞ்ஞானி கருத்து என்ன..?