புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு மே 2020 மாதத்திற்கான அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருள்களை வழங்கிட ஆணை வெளியிடப்பட்டதோடு , கரோனா தொற்று காலத்தில் உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு சமூக நல ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மத்திய அரசின் ஊட்டச்சத்து அளவுகோல்களின் படி தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 450 கிலோ கலோரி சக்தியும், 12 கிராம் புரதமும், உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 700 கிலோ கலோரி சக்தியும் 20 கிராம் புரதமும் வழங்கப்படவேண்டுமென வரையறுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தேசிய மதிய உணவுத் திட்டத்தின் கீழ் (NPMDMS) தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு, 2020-2021ஆம் ஆண்டில் 220 நாட்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசின் அளவுகோலில் இருந்து, கலோரிகள் சற்று குறைவாக சத்துணவு இருப்பதால் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ள பருப்புடன் நாளொன்றுக்கு கூடுதலாக 15 கிராம் (புரதச்சத்து 3.375 கிராம் மற்றும் கலோரி 49.61 கிராம் கலோரி) பருப்பு வழங்கப்பட்டால் மத்திய அரசின் ஊட்டச்சத்து அளவுகோல்களின்படி உரிய கலோரி சக்தி, புரதச் சத்து ஆகியவற்றை பூர்த்தி செய்திடலாம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடப்பாண்டில் (2020) மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நாட்கள், ஏப்ரல், ஜூன், அதற்கு பிந்தைய காலம் பள்ளிகள் திறந்து செயல்படும் வரை அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிட உரிய ஆணையினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, தற்போது வழங்கப்பட்டு வரும் அளவிலான அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப்பொருட்களுடன் கூடுதலாக நாளொன்றுக்கு 15 கிராம் பருப்பு ஆகியவற்றை வழங்க சமூக நல ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.