இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் இருந்து எந்த ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கும் பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்து விட்டு எந்த ஒரு அரசாணையுமின்றி ஆருத்ரா என்னும் தனியார் பால் நிறுவனத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் பால் வழங்கி ஆவின் பொது மேலாளர் மோசடியில் ஈடுபட்ட தகவல் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கண்ட தகவல்கள் பெறப்பட்டது.
இந்த முறைகேட்டில் கீழ்மட்ட அதிகாரிகள் தொடங்கி மேல்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலருக்கும் தொடர்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி கிருஷ்ணகிரி பால் பண்ணையில் நடைபெற்ற முறைகேடுகள் போன்று தமிழகத்தில் உள்ள இதர ஆவின்பால் பணிமனைகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக முகாந்திரங்கள் இருப்பதாகவேத் தெரிகிறது. அரசு துறை நிறுவனமான ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற இந்த முறைகேடுகளுக்கு பின்னால் மிகப்பெரிய சதிகார கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, தமிழக அரசு உடனடியாக பிரச்சினையில் தலையிட்டு சகாயம் போன்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுவதோடு, அதில் சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளும் கூண்டோடு பதவி நீக்கம் செய்து அவர்கள் முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆணையிட வேண்டும்.
ஆவின் நிறுவனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அந்நிறுவனத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டவர்கள் எடுப்பதும் காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.