சென்னை: தமிழ்நாடு - புதுச்சேரி இடையே பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு - புதுச்சேரி இடையே இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம்.
கரோனா பாதிப்பு காரணமாக பொதுப் போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் தேவை கருதி படிப்படியாக ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து சேவை இயங்கவும், 7ஆம் தேதி முதல் மாவட்டத்திற்கு வெளியே பேருந்து சேவை இயங்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.
இருப்பினும் மாநிலத்திற்கு வெளியே பேருந்து சேவைகளை தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. இச்சூழலில், தமிழ்நாடு - புதுச்சேரி - காரைக்கால் ஆகியவை அருகில் இருப்பதால், இரு மாநில மக்களின் பல்வேறு தேவைகளைக் கருதி பயணிக்க வேண்டியுள்ளது. அதனால், தற்பொழுது தமிழ்நாட்டிலிருந்து, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஜிப்மர் உள்ளிட்ட 6 மருத்துவமனைகள் புதுச்சேரியில் உள்ளன. இதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கருத்திற்கொண்டு புதுச்சேரிக்கு பேருந்து சேவையை இயக்க வேண்டும் என கோரியிருந்தார்.
அதேபோல் புதுச்சேரி ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் புதுச்சேரியில் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், புதுச்சேரியிலுள்ள தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பணியாற்றி வருகின்றனர். இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக பேருந்து சேவை அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.