தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், கீழ்க்கண்ட நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
- நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
- இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
- நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
- கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- கரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
- மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும்கூட, கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சைப் பெறவும் வேண்டும்.
- மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ரூ.200 கோடி நிதியில் நெடுஞ்சாலைகள் முதல்கட்டமாக செப்பனிடப்படும்’ - அமைச்சர் எ.வ.வேலு