சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் இறுதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நவம்பர் 10ஆம் தேதி முதல் கட்டுபாடுகளுடன் 50% இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், புறநகர் ரயில் சேவையையும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதியளித்துள்ளது. இதே நாளில் கலை, அறிவியல் கல்லூரிகளையும் திறக்கலாம் என அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கியமான தளர்வுகளை கீழே காணலாம்:
- 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வரையுள்ள பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நவம்பர் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும்.
- 50 விழுக்காடு இருக்கைகளுடன், நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
- பள்ளிக் கல்லூரிகள், பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும், நவம்பர் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கோயம்பேடு சந்தையில் மொத்த பழ வியாபாரம் விற்பனை நவம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- சென்னை கோயம்பேடு பழம், காய்கறி சில்லறை வியாபார கடைகள் நவம்பர் 16ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- 100 பேர்களுக்கு மிகாமல், அரசியல், மதம், பொழுதுபோக்கு உள்ளிட்ட கூட்டங்களுக்கு, நவம்பர் 16ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு, 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.
- பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள் நவம்பர் 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- திருமணம், இறுதி ஊர்வலங்களில் 100 பேர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.