அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சிறப்புத் தகுதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகிய ஐந்து அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்தது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ‘அண்ணா பல்கலைக்கழகம், ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனம் என்ற தகுதி நிலையை அடைந்த பின்னரும்கூட, தொடர்ந்து மாநிலச் சட்டத்தின் கீழ் இயங்கும். மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்ந்து அதற்குப் பொருந்தும். இது குறித்து ஆய்வுசெய்வதற்காக, அமைச்சர்கள் குழுவை அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய முடிவெடுக்கப்படும்’ என்றார்.
இந்நிலையில், இதுகுறித்து விவாதிக்க இன்று மதியம் கூடிய அமைச்சர்கள், செயலாளர்கள் அடங்கிய குழு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு தகுதி வழங்கினால் ஏற்படக்கூடிய நன்மைகள், பாதிப்புகள் குறித்து விவாதித்தது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயக்குமார், ‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்தும், சீர்மிகு தகுதி வழங்குவது குறித்தும் கல்வியாளர்களின் கூட்டம் இம்மாத இறுதியில் நடத்தப்படும்.
நடைபெறும் கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழகத்தினை இரண்டாகப் பிரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது. தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மாநில அரசு அழுத்தம் கொடுத்ததால், மத்திய அரசு இப்போதுள்ள முறையையே பின்பற்றிக் கொள்ளலாம் என அனுமதித்துள்ளது. அண்ணா பெயரால் உள்ள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றாத வகையிலும், மாணவர்களின் நலன் பாதிக்காத வகையிலும் அரசு முடிவெடுக்கும்.
திமுகவிற்கு தேய்பிறை என நான் கூறியதற்கு ஸ்டாலின் போகாத ஊருக்கு வழி சொல்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களை திமுக பெற்றது. தற்போது நாங்கள் அதிக அளவு இடங்களை உள்ளாட்சித் தேர்தலில் பெற்றுள்ளோம். நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் திமுக உருவாக்கியது. நாங்கள் தற்போது சரி செய்து வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம் குறித்து அமைச்சர்கள் கூட்டம்!