சென்னை: கடந்த மாதம், 16, 19ஆம் தேதிகளில் தூத்துக்குடியைச் சேர்ந்த 29 மீனவர்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 40 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள மீனவர்களை மீட்டு தரவேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசு தலையிட்டு இலங்கை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்விளைவாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 மீனவர்களுக்கு இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகம் மூலம் தற்காலிக கடவுச்சீட்டு தயார் செய்து, ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமானநிலையம் வந்த மீனவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் மீன் வளத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துனை இயக்குனர் ஜூலியஸ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், ”நாங்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி எங்களை அடித்து துன்புறுத்தி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி துப்பாக்கி முனையில் எங்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் இந்திய அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினர்.
எங்களுடைய படகுகள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களை மீட்டு தமிழ்நாடு அழைத்து வந்த மத்திய , மாநில அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு தலையிட்டு இலங்கைப் கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ள படகுகளை மீட்டு கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மீனவர்கள் அவர்களின் சொந்த ஊருகளுக்கு செல்வதற்கு மீன்வளத்துறை சார்பில் 3 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நினைவுகளில் அசைபோடும் ஜல்லிக்கட்டிற்கான ரயில் மறியல் போராட்டம்