தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,
வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடப்பதாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினரும் புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து சுமுகமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு இயந்திரத்தில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டிருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் சரி செய்யப்படும்.
வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழலை தடுப்பதற்காக அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்பிற்காக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் 656 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. வாக்குப்பதிவில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை உடனுக்குடன் அனுப்பி தீர்வு காணப்படும்.
இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில் 11 மணி வரையிலான நிலவரம்,
- சூலூர் - 31.55%,
- அரவக்குறிச்சி - 34.89%,
- திருப்பரங்குன்றம் - 30.02%,
- ஓட்டப்பிடரம் - 30.28%
என மொத்தம் 31.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதே போன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் 32.22 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 47% வாக்குகள் பதிவாகி உள்ளது என அவர் தெரித்தார்.