சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், இணையவழி வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளது என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மன நலம் மற்றும் உடல் நலத்தை கருத்திற்கொண்டு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் வகையில் தலைமை கல்வியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மதிப்பெண்கள் வழங்குவது குறித்து வழிமுறை விரைவில் வெளியிடப்படும். இன்று முதல் பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.
இணையவழிக் கல்வியில், அதற்கான வகுப்புகளின் வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு ஆகும்.
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மருத்துவ நிபுணர்களும் அதே கருத்தைத் தெரிவித்தார்கள். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.