சென்னை: கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், "கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் வகையில், வாழ்வாதாரம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிட, பொது விநியோகத் திட்டத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டு, அதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கவும், 14 பொருள்கள் அடங்கிய மளிகைப் பொருள்கள் தொகுப்பினை பொது விநியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு, கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அன்று இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இதுமட்டுமன்றி, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்துப் பொருள்களையும் கொள்முதல் செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் செய்யும் நெறிமுறைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதனால், முதல் மாத கொள்முதலிலேயே அரசுக்கு 80 கோடி ரூபாய் வரையில் சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பான வழக்குகளின் காரணமாக, பொது விநியோகத் திட்டத்தில் பொருள்களின் வழக்கமான விநியோகம் ஒரு வார காலம் தாமதமாக தொடங்கிட நேரிட்டு, ஜூன் 10ஆம் தேதி நிறைவடைய உள்ளது. எனவே, 2 ஆயிரம் ரூபாய், மளிகைப் பொருட்களின் தொகுப்பு ஆகியவற்றை வழங்குவதற்கான பதிவுரசீதுகள் (டோக்கன்) 11-6-2021 முதல் 14-6-2021 வரை நியாய விலைக் கடைகள்மூலம் வழங்கப்படும்.
இந்த ரசீதுகளின் அடிப்படையில், 2 ஆயிரம் ரூபாய், மளிகைப் பொருள்கள் தொகுப்பு ஆகியவற்றினை 15-6-2021 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் காலை 8-00 மணி முதல் நண்பகல் 12-00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்கள் 14 பொருள்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினையும், கரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2 ஆயிரம் ரூபாயினையும், ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில், மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகை ஒன்றாகவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் எவ்வித விடுதலுமின்றி, இரண்டாம் தவணைத் தொகை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 பொருள்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்படும் என்பதால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் / நேரத்தில், தொடர்புடைய நியாய விலைக் கடையிலிருந்து எவ்வித சிரமமுமின்றி பெற்றுச் செல்லலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.