தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சஞ்சய் தத், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகில் வாஸ்னிக், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் நிறைவு விழா கொண்டாட்டம், சிதம்பரம் கைது பழிவாங்கும் நடவடிக்கை என பாஜகவை எதிர்த்து கண்டனத் தீர்மானம், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை குறித்து நாடு முழுவதும் பிரசாரம், இந்தி மொழித் திணிப்புக்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் அமித்ஷாவின் தமிழ்நாடு வருகைக்கு கறுப்புக் கொடி காட்டப்படும், டிஜிட்டல் பேனர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பது உட்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "ஒரே நாடு, ஒரே மொழி என்ற தத்துவத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிறுத்தியிருப்பது தேசத்தை பிரித்துவிடும். எனவே இந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கும் அமித்ஷா தமிழ்நாடு வரும்போது காங்கிரஸ் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படும்.
காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக ப. சிதம்பரம் கைது நடவடிக்கையை பாஜக செய்துள்ளது. மத்திய அரசை எதிர்க்கின்ற ஆற்றல், மன வலிமை ஏதும் அதிமுகவிற்கு கிடையாது. ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது.
மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெளிவாக இருக்கின்றாரா என்று தெரியவில்லை. எனவே அவர் கருத்துக்களை கூறும்போது அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று சான்றிதழ் பெறவேண்டும். ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் அடிமையாக இருந்தனர். தற்போது அவர்கள் கோமாளிகளாக உள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:
ப. சிதம்பரத்தை ஒதுக்குகிறது தமிழ்நாடு காங்கிரஸ்? கலக்கத்தில் கதர் சட்டைக்காரர்கள்