சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூக பாதுகாப்புத் துறை சார்பில், சிறார்களின் வழக்கு விசாரணைகளை 16 இளைஞர் நீதிக் குழுமங்கள், காணொலிக் காட்சி மூலமாக மேற்கொள்ள ஏதுவாக, 23 இடங்களில் இரண்டு கோடியே 60 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளைத் தொடங்கிவைத்தார்.
அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களின் வழக்கு விசாரணைகளை திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 16 இளைஞர் நீதிக் குழுமங்கள் காணொலிக் காட்சி மூலமாக மேற்கொள்ள ஏதுவாக, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கடலூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களிலுள்ள 6 அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் வேலூரில் உள்ள ஒரு அரசினர் பாதுகாப்பு இடம் என மொத்தம் 23 இடங்களில் இரண்டு கோடியே 60 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் எல்காட் நிறுவனத்தின் மூலமாக காணொலிக் காட்சி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், சிறார்களை ஒவ்வொரு விசாரணை நாளிலும் சம்பந்தப்பட்ட மாவட்ட இளைஞர் நீதிக் குழுமங்களுக்கு நேரில் அழைத்துச் செல்லும் காலவிரயத்தை தவிர்க்கவும், வழக்குகளை விரைந்து தீர்வு செய்திடவும், பயணத்தின்போது ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளைத் தவிர்த்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் மதுமதி, சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா, அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.