சென்னை: பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (பிப். 6) காலை அவர் உயிரிழந்தார்.
அவரது இறப்புச் செய்தியை அவரது தங்கை உஷா மங்கேஷ்கர் உறுதிசெய்தார்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நாள்கள் தேசிய அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (பிப். 6) வெளியிட்டுள்ள கடிதத்தில், 'லதா மங்கேஷ்வர் மறைவையொட்டி தேசிய அளவில் இரண்டு நாள்கள் (இன்றும், நாளையும்) துக்கம் அனுசரிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு நாள்களில் எவ்வித அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறாது' எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகிய அரசு சார் அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக செயலிழந்த உறுப்புகள்.. லதா மங்கேஷ்கரை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்!