சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக, பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் பணிகள் முடிவுற்றும், பல மாதங்களாக குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைபட்டுள்ளதாகவும், குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் பல கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த அறிவிப்பில், 'தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 16ஆம் தேதி முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது. கரோனா தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.