சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளங்களுக்கான அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.
குளங்களின் தரத்தை உயர்த்த நிதி
மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை போன்ற முக்கிய அணைகளின் நீர்த்தேக்க கொள்ளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த தேவையான திட்டங்களை இந்த அரசு வகுக்கும்.
பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், நீர்நிலைப் பகுதிகளைப் பழுது பார்த்தல், புதுப்பித்தல், புனரமைத்தல் பணிகளுக்காக 2021-22ஆம் ஆண்டில் 111.24 கோடி ரூபாய் செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.
2021-22ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 50 குறு நீர்ப்பாசனக் குளங்களைத் தரப்படுத்துலுக்கான சிறப்புத் திட்டம் ஒன்று இந்த அரசால் தொடங்கப்படும்.
கல்லணை கால்வாய் புதுப்பித்தல்
நீர்வளத் துறையின் பணிகள் நவீனமயமாக்கப்படும். நவீன தொழில் நுட்பங்களான ஆளில்லா விமானங்களின் மூலம் ஆய்வு, துல்லியமான புவியிடங்காட்டி, புவியியல் தகவல் அமைப்பு போன்றவற்றின் உதவியுடன் பணிகள் மேம்படுத்தப்படும்.
நவீன தொழில் நுட்பங்களான ஆளில்லா விமானங்களின் மூலம் ஆய்வு, தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு, மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
கல்லணை கால்வாய் புதுப்பித்தல் விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து 2,639.15 கோடி ரூபாய் நிதி உதவி பெறப்பட்டுள்ளது.
இரண்டாவது அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டமானது 610.26 கோடி ரூபாய் செலவில் உலக வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: கிராமப்புறங்களில் வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு!