ஆவடியை அடுத்த பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பதாக நேற்று (ஆகஸ்ட் 9) மாலை பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் மாறுவேடத்தில் சென்று சம்பவ இடத்தைக் கண்காணித்தனர். அப்போது, அங்கு மூன்று இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்துள்ளனர். மேலும், அவர்களைச் சுற்றி ஒரு சில இளைஞர்கள் நின்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல் துறையினர் விரைந்து சென்று அவர்கள் மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவர்களது பாக்கெட்டுகளைச் சோதனை செய்தனர். அப்போது, அவர்களது பாக்கெட்டில் மொத்தம் 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் பின் அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் ஆவடியை அடுத்த பட்டாபிராம் வள்ளலார் நகர், 8ஆவது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்ற கான் (25), அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவைச் சார்ந்த அருண்ராஜ் (28), ஆவடி காமராஜ் நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த தினகரன் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் திருநின்றவூர் பகுதியிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் பகுதியில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும், புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவள்ளூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.