சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்களில் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக சென்னை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போதை தடுப்புப் பிரிவு அலுவலர்கள் விமான நிலைய சரக்க பகுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்களை தீவிர சோதனை செய்தனர்.
அப்போது சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படும் பார்சலில் 56 பெட்டிகளில் கவரிங் நகைகள் இருந்தன. அதற்கு அடியில் எபிட்ரின் என்னும் போதை பவுடர் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அலுவலர்கள் போதை பவுடரை பறிமுதல் செய்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இருந்த முகவரியை வைத்து இரண்டு பேரை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பவுடரின் எடை 3 கிலோ என்றும் அதன் மதிப்பு பல லட்ச ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: உ.பி.யில் ரூ.43.80 கோடி மதிப்புள்ள சாரஸ் போதைபொருள் பறிமுதல்