சென்னை: வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குப் பெருமளவில் தங்கம் கடத்தப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சுங்கத் துறை அலுவலர்கள் வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாகச் சோதனைச் செய்தனர்.
அப்போது, அபுதாபியிலிருந்து வந்த விமான பயணிகளைச் சோதனைச் செய்தனர். அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
காபி இயந்திரத்தில் தங்கக்கட்டி
அப்போது அவரின் உடைமையில் வைத்திருந்த காபி தயாரிக்கும் இயந்திரத்தை உடைத்து பார்த்தபோது உருளை வடிவிலான தங்கக்கட்டியை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.59 கிலோ தங்கத்தைப் பறிமுதல்செய்தனர்.
இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி, அவரை வரவேற்க வந்திருந்த இரண்டு பேரையும் சேர்த்து மூவரையும் கைதுசெய்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ட்விட்டரின் புதிய சிஇஓ ஆகிறார் இந்தியர் பராக் அகர்வால்