தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்குவதற்காகப் பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படும்.
அவர்கள் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதனடிப்படையில் பிளஸ் 2 வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள கடிதத்தில், திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோர்பவமேரி, திருநெல்வேலி சங்கர் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், சென்னை ஆழ்வார் திருநகர் ஜெயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜேம்ஸ் சத்தியராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமையாசிரியர்கள் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், குழுவின் தலைவரால் வழங்கப்படும் பணிகளை உடனுக்குடன் மேற்கொண்டு ஆலோசனைக் கூட்டங்களில் தங்களின் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைப் படிவத்தில் சாதிப் பெயர்' சேர்க்கைப் படிவ விநியோகம் நிறுத்தம்!