மதுரை : திமுகவுக்கு பாஜக தான் எதிரி என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசியல் களம் தற்போது நகர்கிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல் திமுகவில் தற்போது மூன்று முதல்வர்கள் இருப்பது தான் அதன் சித்தாந்தம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தை மறைவிற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டிலுள்ள பாஜக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து வருகிறேன்.
நிச்சயமாக அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வேன். ஊரடங்கு காரணத்தால் உள்ளரங்க கூட்டங்களாக நடத்த உள்ளோம்.
பாஜக சித்தாந்தம் அடிப்படையிலானது. திமுக ஆட்சியின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம். இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் வருவதை யாரும் தடுக்க முடியாது. பிரதமர் மோடியின் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டில் மூன்றரை கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதன் காரணமாக வரும் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பெகாசஸ் விவகாரம்
பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்கள் ஒட்டுகேட்பு என்ற புகார் மீது ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார், வாட்ஸ் அப் நிறுவனம் பெகாசஸ் மூலமாக கிராக் பண்ண முடியாது என உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. தனி மனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது.
ஒட்டு கேட்பு குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டை வைக்கின்றனர். பெகாசஸ் ஸ்பைவேரிடம் நம்பர் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்தி தான் ஒட்டு கேட்பு விவகாரம். தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் கட்சி பாஜக. ஒட்டுகேட்பு புகார் என்பது பொய் செய்தி.
வேல் யாத்திரை
பாஜகவில் உள்ள அனைவரும் கூட்டாக பணி செய்து வருகிறோம். வேல்யாத்திரை மக்களின் வேள்விக்காக நடைபெற்றது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் பாஜகவின் யாத்திரைகள். திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழ்நாட அரசியல் களம் நகர்கின்றது.
நாங்கள் திராவிட சிந்தாந்தம் பேச விரும்பவில்லை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளனர். இது தான் திமுகவின் சிந்தாந்தம். திமுக தேர்தலில் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : மேகதாதுவில் அணை கட்டக்கூடாது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை