சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் அமைச்சராக உள்ள பெரியகருப்பன்மீது, கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து அனுமதி இன்றி போராட்டம் நடத்தியது, சட்டப்பேரவைத்தேர்தலின்போது அதிக வாகனங்களைப்பயன்படுத்தியது, அனுமதி இல்லாமல் கட்சி அலுவலகத்தை திறந்தது என மூன்று வழக்குகள் காவல் துறை மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி பெரியகருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் போராட்டம் என்பது ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டம் என்றும்; இதில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கடந்த அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு வழக்குத் தொடரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல் வழக்குகளைப் பொறுத்தவரை தான் வேட்பாளர் என்றும், மற்ற வாகனங்கள் வந்தது குறித்து தனக்கு தெரியாது என்றும்; எனவே, மூன்று வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு விடைத்தாள் மாறிவிட்டது - சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவி வழக்கு