சென்னை: அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காதவர்கள் தான் ஒன்றிய அரசு என்பதைப் புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்கள் என மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள்:
தமிழ்நாடு அரசின் 2021-2022ஆம் ஆண்டிற்கான பொதுக்கணக்கு குழு உறுப்பினராக காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச்செல்வன், பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராக திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி.
மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், அவை உரிமைக் குழு உறுப்பினராக செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் பனையூர் மு.பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நான்கு பேரும் நேற்று(ஜூன்.25) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நேரில் சென்று நன்றி தெரிவித்த திருமாவளவன்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை பொதுக் கணக்கு, பொது நிறுவனங்கள், மதிப்பீட்டு மற்றும் அவை உரிமைக்குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை இணைத்தமைக்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இருப்பதைப்போல, மாநில ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கையாக வைத்துள்ளோம். தமிழ்நாடு தழுவிய அளவில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க மீண்டும் ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்களை துணைவேந்தராக நியமிக்கவேண்டும்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் 5, 6 பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்களை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
தமிழ்நாடு அரசு அமைந்துள்ள பொருளாதார நடவடிக்கை குழுவின் மூலம் முதலமைச்சரின் மீதான மதிப்பு தேசிய அளவில் உயர்ந்திருக்கிறது. சமூக நீதியையும் சமத்துவத்தையும் திமுக சிறப்பாக பாதுகாக்கிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமைப்படுகிறோம், பாராட்டுகிறோம்.
தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் சமூகநீதி தளத்தில் முன்னெடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் உற்ற துணையாக இருப்போம் என்பதை சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் பிறந்த நாளில் உறுதிபடத் தெரிவிக்கிறோம்.
திமுக சமூக நீதி இயக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. உள்நோக்கம் இல்லாமல் கொள்கை சார்ந்து விசிக இணைந்துள்ளது. இந்த அணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். மேலும் ஒன்றிய அரசு கொண்டு வரும் சிறு துறைமுகங்கள் மசோதாவிற்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்ததை வரவேற்கிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காதவர்கள் தான் 'ஒன்றிய அரசு' என்பதைப் புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றம் சென்றால் நீதிபதிகள் இவர்களைப் பார்த்து நகைப்பார்கள்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பாலியல் விவகாரம்: ராஜகோபாலனுக்கு குண்டாஸ்!