மக்கள் நீதி மய்யத்தின் உள்ளாட்சி செயல்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அக்கட்சித்தலைவர் கமல் ஹாசன் காணொலி மூலம் கலந்து கொண்டார். அப்போது, கிராமப்புற ஊராட்சி மற்றும் நகர்புற ஊராட்சிகளுக்கான தலா 7 உறுதிமொழிகளை அவர் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சீரமைப்போம் என்பது அனைத்தையும் தான். உள்ளாட்சி குறித்த புரிதல் மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு. என்னுடைய நகர்வுகள் மக்களை நோக்கியே இருக்கிறது. நல்லவர்களுடன் கூட்டணி என்று ஏற்கனவே கூறியுள்ளேன். நல்லவர்கள் அரசியலில் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் அன்பை மதிக்கிறேன். அவர்களுடன் கூட்டணி குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல. தனது ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என ரஜினி கூறியுள்ளார். அந்த குரலே போதும், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
கிராம சபை நடப்பது போன்ற பிரம்மை தான் உள்ளது. உண்மையாகவோ, முழுமையாகவோ நடைப்பெறுவதில்லை. தமிழகத்தை சீரமைப்பதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு. அதை நோக்கியே எங்கள் பயணம். மக்கள் மாற்றத்திற்காக தயாராகிவிட்டனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: மீனவர்களை காக்க தனிப்படை உருவாகும்! - வைகோ எச்சரிக்கை!