சென்னை: திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்கு இன்று (ஜன.3) காலை ஐந்து மணியளவில் டிக்கெட் எடுப்பதற்காக கவுன்ட்டருக்கு பயணிகள் சிலர் வந்துள்ளனர்.
அப்போது டிக்கெட் கவுன்ட்டர் நீண்ட நேரமாக திறக்கப்படாததால், கவுன்ட்டருக்கு உள்ளே பயணிகள் எட்டி பார்த்த போது, ஊழியர் ஒருவர் கட்டிப்போட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலின் பேரில் ரயில்வே டி.எஸ்.பி ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே கட்டிபோட்டிருந்த ஊழியரை விடுவித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் அளிக்கும் ஊழியரான டீகா ராம் மீனா(28) என்பது தெரியவந்தது.
இரவு நேரப் பணியில் டீகா தனியாக இருந்த போது சுமார் நான்கு மணியளவில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென டிக்கெட் கவுன்ட்டரில் புகுந்ததாகவும், உடனே அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டு நாற்காலியில் உட்கார வைத்து கை மற்றும் வாயை கட்டிப்போட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், கவுன்ட்டரில் இருந்த ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு கதவை பூட்டிவிட்டு தப்பிச்சென்றதாக ஊழியர் டீகா தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊழியர் டீகா அளித்த புகாரின் பேரில் ரயில்வே எஸ்.பி அதிவீர பாண்டியன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
டிக்கெட் கவுன்ட்டரில் சிசிடிவிக்கள் இல்லாததை அறிந்து கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ரயில் நிலையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மயிலாடுதுறையில் திருமணமண்டபம் திறப்புவிழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு