சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், " பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு விரோதமானதாகவும் இந்தச் சட்டத்தில் மதத்தை புகுத்தி, இஸ்லாமியர்களை தவிர்த்தும் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு வந்து 35 ஆண்டுகளாக தங்கியிருந்து 3 தலைமுறையைக் கண்ட இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " மியான்மர் உள்பட இந்தியாவை ஒட்டி உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களிடம் மதத்தையும், மொழியையும் சாதியையும் புகுத்தக் கூடாது. பிரித்து ஆளக்கூடிய வகையில் சட்டம் இருப்பதால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்டப் போராடுகிறார்கள். இதைக் காங்கிரஸ் கட்சி தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை. அரசுக்கு எதிரான விசயங்களில் மென்மையாக கையாள வேண்டும். மாணவர்கள் மீது தடியடி நடத்துவதோ, வன்முறையை திணிப்பதோ தீர்வாகாது. இந்தியா சர்வாதிகார நாடு அல்ல" என்று கூறினார்.
மேலும், "அரசு தவறு செய்யும் போது அதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அரசு தவறுகளை திருத்திக் கொள்ளாத போது நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டியிருக்கும். 9 மாவட்டங்களில் தவறு இருந்ததால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடுத்தது. திமுக, காங்கிரஸ் உள்பட எல்லாக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதனால் தள்ளி போட வேண்டிய முயற்சி கிடையாது.
இரண்டு நாளில் இறுதிப் பட்டியல் வெளியாகும் போது, யார் போட்டியிடுவது என்பது தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
டெல்லியில் ஓபிஎஸ்; நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு!