சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். சபரீசனுக்குச் சொந்தமான ஐந்து இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாள்களாகவே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் விமர்சித்துப் பேசிவந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இது பழிவாங்கல் நடவடிக்கை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை. இது பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு.
திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு. இத்தகைய அரசியல்ரீதியான அச்சுறுத்தல்களைப் பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.