தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் பிரதிநிதிகள் சார்பில் பாசிச எதிர்ப்பு - மதநல்லிணக்க மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது:
"பாஜகவை பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடவிட வேண்டும் என்று விருப்பம். அவ்வாறு நடக்க வேண்டும் என்பதால்தான் சமரசம் செய்துகொண்டோம்.
நாங்கள் 5 ஆண்டுகாலம் எந்த பேரமும் பேசாமல் திமுகவுடன் இருந்தோம். எல்லா கதவுகளையும் திறந்துவிட்டு, இடங்களுக்கு பேரம் பேசினால் அது சராசரி அரசியல்.
நாங்கள் ஸ்வீட் பாக்ஸ் கேட்கும் கட்சி இல்லை
திமுக தமிழநாட்டுப் பிரச்னைக்குக் குரல் கொடுப்பதால் கை கோர்த்தோம். நாங்கள் ஸ்வீட் பாக்ஸ் கேட்கும் கட்சி இல்லை.
திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எங்களை சீண்டுகிறார்கள். தேவையில்லாமல் எங்களுக்கு கோபம் வராது. கோபம் வந்தால் நியாமாக இருக்கும். இது வெற்றி பெரும் கூட்டணி. மக்கள் நலக் கூட்டணியில் நாங்கள் பெற்ற 25 இடங்களுக்கு சமம் நாங்கள் தற்போது போட்டியிட இருக்கும் 6 தொகுதிகள்.
கூட்டணியிலிருந்து வெளியேறினால் நட்டம்தான்
பாஜக எதிர்பார்ப்பதை போல கூட்டணியில் இருந்து வெளியே வந்தால், நமக்குதான் நட்டம். திமுக கூட்டணி கடுமையாக பேரம் பேசிகிறார்கள். இதற்காக தனியாக நின்று பலத்தை காட்ட வேண்டும் என்று அரசியல் தெரியாதவர்கள் கூறுகிறார்கள்.
தனியாக போட்டியிட்டால் ஒருபோதும் சட்டப்பேரவையில் இடம்பெற முடியாது. பாபர் மசூதியை இடித்துதான் இந்துக்களை ஒன்றிணைத்தார்கள்.
சின்னம் பிரச்னை இல்லை
சின்னம் ஒரு பிரச்னை கிடையாது. நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்றால்தான் விழுப்புரத்தில் வெற்றி பெற முடியும். அதனால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்த போது 11 தொகுதிகளில் மணி சின்னத்தில் நின்றோம். தொடர்ந்து ஒரு கொள்கையாக, தொலைநோக்கு திட்டத்துடன் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வருகிறோம். இடங்கள் முக்கியம் அல்ல. பிரதிநிதித்துவம்தான் முக்கியமானது.
அங்கே எங்கள் குரல்களைதான் பதிவு செய்ய முடியும். எங்களை அவமரியாதை செய்துவிட்டார்கள் என்று நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அது ஒருநாள் செய்தி.
திமுகவின் வேண்டுகோளுக்கு இணங்கினோம்
மதச்சார்பற்ற வாக்குகளை சிதறடிக்காமல் காப்பாற்றி உள்ளோம். எதிர்காலப் பேராபத்தை தடுக்க இது அவசியம். இது சமரசம் அல்ல, இதுதான் சரி என்று எடுத்த முடிவு.
பாஜக எதிர்கொள்ள எங்களுக்கு கூடுதல் இடம் வேண்டும் என்று திமுக சொல்லவில்லை. பெரிய அண்ணன் மனோபாவத்தை காட்டவில்லை. எங்களிடம் வேண்டுகோள் விடுத்தது. இணங்கினோம், இசைந்தோம், நோ காம்பிரமைஸ்"
இவ்வாறு தனது உரையை நிறைவு செய்தார் திருமாவளவன்.
இதையும் படிங்க: இது விசிகவின் உத்தேச பட்டியல் இல்லை - திருமா மறுப்பு