சென்னை: சனாதன இந்தியாவை ஒழித்து சமத்துவ, சகோதரத்துவ இந்தியா அமைய பாடுபட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு போராடியதாக ஒரு பார்வை நிலவுகிறது, அது தவறு. சர்வதேச சமூகத்தில் அவரை மக்களின் உரிமைக்காக போராடிய தலைவராகதான் பார்க்கின்றனர்.
அம்பேத்கரை சுருக்கி தலித் தலைவராக பார்ப்பது தவறு, சனாதன இந்தியாவை மாற்றி அமைக்க வேண்டும், இந்த இந்தியாவில் சுதந்திரம் இல்லை, சமத்துவம் இல்லை, சாதிய முரண்பாடுகள் இல்லாத இந்தியாவை அமைக்க வேண்டும். மொழி, இனம் ,சாதி எல்லாம் கடந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்.
நாளை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து நற்பணிகளை செய்ய விடுதலை சிறுத்தைகள் முன்வர வேண்டும். முதியோர் இல்லங்களில் வயதானோருக்கு அறுசுவை உணவு வழங்க வேண்டும், இணைய வழி கருத்தரங்கங்களை ஒன்றிணைக்க வேண்டும், தொடர்ச்சியாக கருத்தியல் பரப்புதல் நிகழ்வுகளை நடத்த வேண்டும்.
நாளை மதுரை தல்லாகுளத்தில் அம்பேத்கர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன் என ட்விட்டர் வாயிலாக தெரிவித்தார்.