இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் தனது உரையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை நிதியமைச்சர் வெளியிடுவார் என்று கூறியிருந்தார். அதனால் நாடே நிதியமைச்சரின் அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
இந்நிலையில், சிறு குறு தொழில்கள் தொடர்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்புகள் எவையும் உடனடியாக மக்களுக்குப் பயனளிக்கக் கூடியவையாக இல்லை. பிரதமரின் வழக்கமான வெற்று உரைக்கு விளக்க உரையாக இது அமைந்துள்ளதே தவிர வேறேதும் இல்லை.
குறு நிறுவனங்கள் பெரும்பாலும் குடிபெயர் தொழிலாளர்களை நம்பித்தான் இயங்கிவருகின்றன. அவர்களெல்லாம் இன்றைக்குத் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சொந்த ஊர் அழைத்துவர ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து கொண்டிருக்கிறார்கள்.
அதில் பலர் வழியிலேயே உயிரிழக்கும் பேரவலம் நடந்துகொண்டிருக்கிறது. இத்தகைய கொடுமைகளைப் பற்றியோ, அவர்களுக்குத் தீர்வு அளிப்பது பற்றியோ நிதியமைச்சர் ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.
மார்ச் மாத கடைசியில் நிதி அமைச்சர் அறிவித்த 1.76 லட்சம் கோடிக்கான நிவாரணங்களும் இதேபோலத்தான் வெற்று அறிவிப்புகளாக இருந்தன. அப்படி இந்த அறிவிப்புகளும் இருந்துவிடுமோ என்ற அச்சத்தை, நிதி அமைச்சரின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு உறுதிபடுத்தியிருக்கிறது.
பேரிடர் காலத்தில்தான் ஒருவரின் நிர்வாகத்திறமையை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நடந்துசெல்லும்போதே விழுந்து செத்துக்கொண்டிருக்கும் குடிபெயர் தொழிலாளர்களின் சடலங்களோடு நமது ஆட்சியாளர்களின் மெத்தனமும் திறமையின்மையும் சேர்ந்து நாறிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் உரிய நேரத்தில் மக்கள் தீர்ப்பை நிச்சயம் அளிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெறிகெட்ட செயல்களை அனுமதிக்க முடியாது - தலைமைச் செயலருக்கு வைகோ கண்டனம்