சென்னை: ஆல்பர்ட் திரையரங்கில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் இன்று திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்கள், அங்கு புரோஜக்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் படம் திரையிடப்படாததால் ரகளையில் ஈடுபட்டனர். அந்த ரகளையில் திரையரங்கின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பழம்பெரும் திரையங்குகளுள் ஒன்றான ஆல்பர்ட் திரையங்கில், நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் நடந்த டிக்கெட் விற்பனையின் முடிவாக இன்று (ஆக.27) ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
இந்நிலையில், புரொஜக்டரில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக 12 மணி காட்சி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 12 மணி காட்சி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதனால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தியில் திரையரங்க நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சிலர், திரையரங்கின் முகப்பு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த எழும்பூர் போலீசார் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ரசிகர்கள் அனைவரிடமும் பணம் வசூலித்து உடைந்த கண்ணாடியை மாற்றித் தருவதாக உறுதியளித்தனர். அதேபோல, திரையரங்க நிர்வாகிகளும் ரத்தான காட்சியின் டிக்கெட்டுக்கான பணத்தை ரசிகர்களிடமே திருப்பி அளித்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் புரொஜெக்டர் பழுது சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் வழக்கம்போல், திரையிடப்படும் என திரையரங்க நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.194. கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவ கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைப்பு