சென்னை: எர்ணாவூர் விம்கோ அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், கர்ணன் (57). இவருடைய மகன் பிரதீப் (26).
இவர்கள் இருவரும் சொந்தமாக மினிவேன் வைத்து தனியார் கூரியர் நிறுவனத்தில் பொருள்களை விநியோகம் செய்யும் பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென பிரதீப்பின் செல்ஃபோன் எண்ணிற்குத் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து 4 முறை, 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. உடனடியாக ஏடிஎம் கார்டு வைத்திருந்த தந்தையிடம் கேட்டபோது அவர் சோதனை செய்துவிட்டு ஏடிஎம் காணவில்லை எனக் கூறியுள்ளார்.
ஏடிஎம் திருடன் கைது
உடனடியாக சம்பவம் குறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் கர்ணனும், பிரதீப்பும் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் சுதாகர், தலைமையில் பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுந்தகவலை வைத்து பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம் மையத்திற்குச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்நபர் விம்கோ ஐடிசி, ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த பிரதீப் குமார் (22) என்பதும், இவர் கர்ணன், பிரதீப்பிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், கர்ணனுடன் டெலிவரிக்குச் சென்றபோது ஏடிஎம் கார்டு மூலம் கர்ணன் டீசல் போட்டு பணம் செலுத்தியபோது, அந்த ஏடிஎம் ரகசிய எண்ணைத் தெரிந்துக் கொண்டு, வண்டியில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்து ஏடிஎம் மையத்தில் 4 முறை 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் திருடியதை ஒப்புக்கொண்டார்.
துரிதமாக செயல்பட்ட காவல் துறை
இதையடுத்து, அவரிடம் கையில் இருந்த 4 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவருடைய வீட்டில் இருந்த ஏடிஎம் கார்டு, 36 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த 40 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டை உரிமையாளர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
மேலும், பணத்திருட்டில் ஈடுபட்ட பிரதீப் குமாரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகார் பெற்று துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்தில் பணத்தை மீட்ட ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர் ராஜி உள்ளிட்ட காவலர்கள் கணேசமூர்த்தி, பிரபாகரன் ஆகியோரை காவல் துறை உயர் அலுவலர்கள் வாழ்த்திப் பாராட்டினர்.
இதையும் படிங்க: மண உறவைத் தாண்டிய காதல்: கட்டட வேலை செய்யும் பெண்ணை கட்டையால் அடித்து நகை பறிப்பு