சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் தவறுகள் நடந்து கொண்டு தான் இருப்பதாகவும், தமிழ்நாடு அரசு அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி கூறுகையில், “அரசு வழக்குகளின் அன்றன்றைய நிலவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி
பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சட்டத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கை.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி 6 சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்றளவில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,186 நீதிமன்றங்களில், 990 நீதிமன்றங்கள் சொந்தக் கட்டிடங்களில் உள்ளன.
நிலுவை வழக்குகளில் கூடுதல் கவனம்
109 நீதிமன்றங்கள் அரசு கட்டங்களில் வாடகையில் உள்ளன, 86 நீதிமன்றங்கள் தனியார் கட்டிடங்களில் வாடகையில் உள்ளன. மத்திய அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில் வாடகை கட்டிடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு வழக்குகளின் அன்றைய நிலவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலுவையில் உள்ள நிதி தொடர்பான வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி வழக்கை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலை தவறுகள் மீது நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதைத் தமிழ்நாடு அரசு திருத்திக் கொண்டு தான் வருகிறது. டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க : 'சீர்மிகு சட்டப்பள்ளியில் பயின்றவர்களுக்கும் உதவித்தொகை' - உயர் நீதிமன்றம்