சென்னை: பாடி மேம்பாலத்தில் இருந்து அண்ணா நகர் ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லும் வழியில் காவலர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் ஹெட்போனில் பேசியவாறு சாலையில் சென்றுள்ளார். அப்போது தலைக்கவசம் அணிந்து செல்லலாமே என்று அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் காவலரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு காவலர் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு "உனக்கென்னடா பிரச்னை. நான் ஹெல்மெட் போடுவேன். போடாம போவேன், நீ ஏன் கேக்குற'' என மிரட்டும் தொனியில் வாகன ஓட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பானது.
இந்த வீடியோ தொடர்பாக ஐ.சி.எப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. அவரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் அரசுப்பேருந்தை கற்களை காட்டி மிரட்டிய போதை ஆசாமி