சென்னை: தேசிய, மாநில அளவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசு 2005ஆம் ஆண்டு சட்டம் ஒன்றை இயற்றியது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.
ஆணையத்தின் அமைப்புமுறை
இந்த ஆணையத்திற்கு தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. இந்த ஆணையத்திற்கு சட்டம், கல்வி, உளவியல், இளையோர் நீதி, மருத்துவம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆகிய ஆறு பிரிவுகளில் உறுப்பினர்கள் நியமனம்செய்யப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி கட்டடத்தின் முதல் தளத்தில், வாடகைக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தற்போது இயங்கிவருகிறது.
ஆணையத்தின் முக்கியப் பணிகள்
இந்த ஆணையமானது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் நல குழுக்கள், பதிவுசெய்யப்பட்டுள்ள குழந்தை பாதுகாப்பு இல்லங்கள், தத்தெடுப்பு மையங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் முக்கியப் பணியினைச் செய்துவருகிறது.
இவற்றுடன் மிகவும் முக்கியமாக போக்சோ சட்டம், குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை பாதுகாப்புச் சட்டம், குழந்தைத் திருமணங்கள் தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பணிகளையும் இந்த ஆணையம் மேற்கொண்டுவருகிறது.
பத்மசேஷாத்ரிக்குப் பின்
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக தற்போது சரஸ்வதி ரங்கசாமி பணியாற்றிவருகிறார். சமீபத்தில், சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் கைதுசெய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் பத்து பள்ளிகளின் மீது பாலியல் குற்றச்சாட்டு நடைபெற்றதாக ஆணையத்திற்குப் புகார்கள் குவிந்துள்ளன.
மேலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்ததாக, சில தனியார் பள்ளிகள் மீதும் புகார்கள் வந்துள்ளன.
வசதி குறைபாடுகள்
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் தளத்திற்குச் செல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை. அங்கு சாய்வு தளம் எதுவும் அமைக்கப்படாமல் மாற்றுத்திறனாளிகள் மேலே சென்று புகார் அளிக்க முடியாத நிலைதான் உள்ளது.
அதேபோல் ஆணையத்தின் தலைவருக்கு மட்டுமே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் யாரும் வந்தால் அமர்வதற்கு எந்தவித வசதியும் இல்லை. விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களை வெளியில் அமரவைப்பதற்கும் எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் சமூக நலத் துறையிலிருந்து நியமனம்செய்யப்பட்டுள்ள இணை இயக்குநருக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
சட்டப்படி செய்ய இயலாத விசாரணை
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்வதற்கு என தனியாக அறை எதுவும் இல்லாததால், ஆணையம் குடிமையியல் நீதிமன்ற நடவடிக்கையின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளராக, மாநில அரசின் செயலர் ஐஏஎஸ் நிலையில் ஒருவரை நியமிக்க வேண்டும். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆணையத்தின் செயலாளராக மாநில சமூகப் பாதுகாப்புத் துறை ஆணையர், கூடுதல் பொறுப்புச் செயலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.
ஆள் பற்றாக்குறை
இதனால் ஆணையத்திற்கு உடனடியாகத் தேவையான வசதிகளைப் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் ஆதங்கப்படுகின்றனர். தற்போது ஆணையத்தில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் பாலியல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்து அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவது போன்றவைக்குக்கூட தேவையான பணியாள்கள் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் இல்லங்களை ஆணையத்தின் உறுப்பினர்கள் நேரடியாக ஆய்வுசெய்கின்றனர். ஆனால் ஆணையத்தின் முக்கியப் பொறுப்பில் சமூக நலத் துறை அலுவலர் பணியில் இருப்பதால் உறுப்பினர்களின் பணி பாதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசுக்குப் பரிந்துரை
இது குறித்து, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்களிடம் கேட்டபொழுது,
"தற்பொழுது ஆணையத்திற்கு பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்குகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. அதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. ஆணையத்தில் விசாரணை மேற்கொள்வதற்குப் போதுமான இடம் இல்லாததால், ஆணையத்திற்கு வேறு இடத்தை ஒதுக்கித் தாருங்கள் என அரசுக்குப் பரிந்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம். அவ்வாறு அரசு ஒதுக்கித் தரும்பட்சத்தில், ஆணையத்தின் பணிகளை மேலும் சிறப்பாகச் செய்ய ஏதுவாக இருக்கும்.
ஆணையத்திற்குக் கூடுதலாகப் பணியாளர்களை நியமனம்செய்தால், பாலியல் குற்றச்சாட்டு போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாக வந்து புகார் தருவதை நாங்கள் பெற முடியும். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படுவதுடன், குழந்தைத் தொழிலாளர்கள் முறை வராமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும். அரசிடம் எங்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து பரிந்துரைகளை அளிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்களின் முழு விவரம்