சென்னை: பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (17). இவர் நேற்று (ஜூலை 27) மாலை சுமார் 5 மணியளவில் பழைய பல்லாவரம் சுரங்கப் பாதை அருகே சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மூர்த்தியை வழிமறித்து, கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துச் சென்றனர்.
விசாரணை
இதுகுறித்து மூர்த்தி பல்லாவரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பம்மல், பசும்பொன் நகரைச் சேர்ந்த பாலா (19), பிரின்ஸ் (21) என்பது தெரியவந்தது.
இன்று (ஜூலை 28) அவர்களது வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கைதுசெய்த காவலர்கள், மூர்த்தியிடம் வழிப்பறி செய்த செல்போனையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
புழல் சிறையில் அடைப்பு
இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இவர்கள் பெட்ரோல் வாங்க பணம் இல்லாததால் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பேற்க முடியாது- அண்ணா பல்கலைக்கழகம்!'