தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாளில் 27 துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மானியக் கோரிக்கையில் பேசிய சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ”முதலமைச்சர் எட்பபாடி பழனிசாமி விவசாயிகளின் இன்னல்களை அறிந்த விவசாயி என்பதால், கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர், மீன் வளத் துறை அமைச்சர் ஆகியோர், ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தனர். இதன்மூலம் தமிழ்நாட்டை நீர் மிகை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் தீவிரமாகப் பணியாற்றி வருவதை அறியமுடிகிறது. கொங்கு மண்டலத்தின் முக்கியப் பிரச்சினையான பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்காக, முதலமைச்சர் நேரிடையாக கேரளா முதலமைச்சரோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் அடிப்படையில் தனித்தனியாக பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்திற்கு என்று ஒரு குழுவும், பாண்டியாறு-பொன்னம்புழா பாசனத் திட்டத்திற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கின்றன. இப்பேச்சுவார்த்தை விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்.
பொள்ளாச்சி பகுதிகளிலே பெய்கின்ற மழைநீரைச் சேமித்து வைப்பதற்காக பல தடுப்பணைகளைக் கட்டுவதற்கு இந்தாண்டு பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த முதலமைச்சருக்கு பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் அரை நூற்றாண்டுக்கும் மேலான கோரிக்கையை ஏற்று அப்பகுதியினை ’பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’ அறிவித்து, அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிட்டு இன்றைக்கு ’காவேரி காப்பாளராக’ முதலமைச்சர் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்” என்றார்.