கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றங்களின் வழக்கமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரித்துவந்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும்பட்சத்தில் நீதிமன்றப் பணிகளை படிப்படியாக தொடங்குவது தொடர்பாக கருத்துக்களை அனுப்பிவைக்கும்படி, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும், புதுச்சேரி மாநில முதன்மை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கருத்துக்களை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு முன் அனுப்பி வைக்கும்படியும், கிருமிநாசினி உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கும்படியும் தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 7ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் புதுச்சேரி முதன்மை நீதிபதியுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விவாதிக்க இருப்பதாகவும், அன்றைய தினம் 10 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங்கில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.