சென்னை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (Tamil Nadu State Marketing Corporation- TASMAC) கீழ் இயங்கி வரும் அனைத்துவிதமான மதுபான விற்பனை நிலையங்களும் அதனுடன் இணைக்கப்பட்ட பார்களும், நடப்பு ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் மாவட்ட, பணிமனை மற்றும் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ' திருவள்ளுவர் தினமான வரும் ஜனவரி 15 (சனிக்கிழமை); வடலூர் ராமலிங்கனார் நினைவு நாளான ஜனவரி 18 (செவ்வாய்க்கிழமை) மற்றும் குடியரசு தினமான ஜனவரி 26(புதன்கிழமை) ஆகிய ஜனவரி மூன்று தினங்களில் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும்.
உங்கள் கீழ் பணிபுரிபவர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும், மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள எந்த கடைகளிலும் விதிமீறல் நடக்காமல் இருக்கவும் அறிவுறுத்த வேண்டும்" என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 5,300க்கும் மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ₹130 கோடி முதல் ₹140 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
இதையும் படிங்க: மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்குமா? - குழப்பத்தில் மாவட்ட நிர்வாகம்