இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நெல்லை கண்ணன் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், வன்முறையைத் தூண்டும்வகையில் அவரது பேச்சு இருந்ததாலேயே கைதுசெய்யப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
ஹெச். ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தபோது கைது நடவடிக்கை மேற்கொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவர்களின் பேச்சு பொதுவாக இருந்ததாகவும் வன்முறையைத் தூண்டும்வகையில் இல்லை என்றும் கூறினார்.
மேலும், கல்லூரிக்குள் குண்டு வீசப்படும் என்று ஹெச். ராஜா எச்சரித்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், உள்ளாட்சியிலும் அதிமுகவின் நல்லாட்சி தொடரும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.